மலர் -23 துந்துபி வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1982 இதழ் 1&2
இந்த அகண்ட பூமண்டலத்தில் ஸகல ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கும் பரம க்ஷேமத்தையும் தரும் ஸர்வமங்கள ரூபியான ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் கருணையினாலும், அந்த எம்பெருமானுடைய பிரேரணையினாலும், நமது நடமாடும் தெய்வமாகிய பூஜ்யஸ்ரீ ஸ்ரீகாஞ்சி ஜகத்குரு ஆசார்யாளின் பூர்ண அனுக்கிரஹத்தாலும், 100 கோடி மங்களகரமான “ஸ்ரீராம” நாமா எழுதி அதை அஸ்திவாரமாகக் கொண்டு “ஸ்ரீபாதுகா” பிரதிஷ்டை ஜம்ஷெட்பூரில் கூடிய சீக்கிரம் நடக்க அதற்கான பிரயத்தனங்கள் நடந்து வருகிறது. லிகித ஜபம் ஆயிரம் மடங்கு அதிக பலனை தரக்கூடியது. நமது புண்ய பூமியான பாரத தேசத்தின் பல பாகங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கில் எழுதிய “ஸ்ரீ ராம நாமா வந்து கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 80 கோடிக்கு மேல் வந்து பூஜையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தம அரிய தெய்வீக தர்ம கார்யத்தில் சிறந்த மானிட பிறவி எடுத்த நாம் ஒவ்வொருவரும், ஆத்மார்த்தமாக கலந்து கொண்டு அவரவர்களுடைய செயலுக்கும் சௌகரியத்திற்கும் தக்க படி, உதவி ஒத்தாசைகள் செய்து, ராம நாம பலத்தினால், கலிதோஷத்தினால் ஏற்படும் பலவித கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபட்டு, பெரிய பலனை அடைந்து மானிட ஜன்மாவின் பிறவி பயனை அடையும்படி பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
இந்த உத்தம கார்யத்திற்கு தர்மாத்மா சிலர் பூமி (சுமார் 6 ஏக்கர்) கொடுக்க முன்வந்து இருக்கிறார்கள்.
இந்த 100 கோடி “ஸ்ரீ ராம “ நாமாவுடன் 8 கோடி “ஸ்ரீ ராம ” நாமாவும் சேர்த்து பூர்ணமாக 108 கோடி தற்சமயம் ஸ்தாபிதம் செய்வதாகவும், பின்னால் எழுதி வரும் ஸ்ரீ ராம நாமாக்களையும் இதன் அருகிலேயே ஸ்தாபிதம் செய்ய வேண்டிய வசதிகளும், ஒரு பெரிய மண்டப மத்தியில் சுரங்க அறையும்.
உயர்வான பீடத்தில் ஸகஸ்ர தள தாமரை கமலத்தின் மத்தியில் திவ்ய ஸிம்ஹாஸனத்தில், வெண்குடை சூழ, ஸ்ரீ பாதுகா ஆழ்வாரையும் பரந்தாமனான ஸ்ரீ பட்டாபிராமனையும் உத்தம நன்னாளில் ஸ்ரீ ஆசார்யாளின் கருணாகடாக்ஷத்துடன் வேத ஆகம விதிகளோடும் ஸகல சாஸ்த்ர சம்பந்தமாக எழுந்தருளி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இருபுறம் ஸ்ரீ வேதவ்யாஸரும், ஸ்ரீ வால்மீகியும் அமர ஒருபுறம் ஸ்ரீ கைலாசபதியான ஸ்ரீ உமாபதி விருஷபாரூடராகவும், மறுபுறம் ஸ்ரீ வைகுண்டபதியான ஸ்ரீலக்ஷ்மிபதியான ஸ்ரீமன் நாராயணன் சேஷசயனத்திலும் முன்பக்கம் ஸ்ரீ ஆதிசங்கரர் சிஷ்ய பரம்பரையுடனும், ஷண்மதஸ்தாபன மூர்த்திகள் சக்தி தெய்வங்களோடும், ஸ்ரீ குரு பரம்பரையின் பாதுகையும் ஸ்தாபிக்கப்பட்டு, பிரபு ஸ்ரீ ஆஞ்சநேயன் ஸர்வ மங்கள விக்ரகங்களை திவ்ய தரிசனம் செய்து கொண்டு எதிரில் வீற்றிருக்க, எதிர்பக்கம் ஸ்ரீ கீதாசாரியனும், பிரபு ராதாகிருஷ்ணனும் அமர, பிரபுவின் திவ்யபாதாரவிந்தங்களை அனுதினமும் பிரார்த்தித்துக் கொண்டு காரியங்கள் நடந்து வருகிறது. இந்த திருமண்டபத்தை நான்கு வேதங்களும் நான்கு தூண்களாகக் கொண்ட கொலு மண்டபமாக அமைய இருக்கிறது. அதை சுற்றி சத்காரியங்களுக்காக ஒரு ஹாலும் வசதிகளோடு அமைய இருக்கிறது. உட்புற சுவர்களில் இதிகாச புராணங்களின் தெய்வீக கலா படங்கள், பல்வேறு க்ஷேத்திரங்கள், புண்ணிய நதிகளின் தோற்றங்களும் வரைய இருக்கிறது.